Recent News
recent

கல்வித்துறையில் ஆலோசனை வழிகாட்டல் செயல்முறை ஏன் அவசியம் ?




இன்றைய மாணவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். அவற்றைத் தீர்த்து நல்வழி காட்ட வழிகாட்டலும் ஆலோசனைவழங்கலும் என்ற செயன்முறைகள் உதவி நிற்கின்றன.


வழிகாட்டுதல் - Guidance
மனித வாழ்க்கையின் பாடசாலை வாழ்க்கையின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும், எல்லா வளர்ச்சிப்பருவங்களிலும் சூழலுடன் பொருத்தப்பாடடைந்து இயைபாக்கம் காணவும், சுய திறன்களை விருத்தி செய்யவும், பொருத்தமான தெரிவுகளை (பாடத்தெரிவு, தொழிற்தெரிவு), தீர்மானங்களை மேற்கொள்ளவும் உளவியல் அணுகுமுறை அடிப்படையில் பயிற்சி பெற்றவரால் வழங்கப்படும் உதவியே வழிகாட்டலாகும்.





இவ்வகையில் தன்னைத்தானே உணர்ந்து சுயவிளக்கம் பெறவும், யதார்த்த நிலைக்கேற்ப இயைபாக்கமடையவும், பொருத்தமானவற்றைத் தெரிவு செய்யவும், வழிகாட்டல் உதவுகின்றது. கல்வி, பாடத்தெரிவுகள், உயர்கல்வி, தொழிற்கல்வித் தெரிவுகள், தொழிற் தெரிவுகள், பாலுணர்வுப் பிரச்சினைகள், திருமணம், காதல், உடல் - உள ஆளுமை போன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுகளின் பிரச்சினைக்களுக்கு வழிகாட்டல் சேவை மூலம் தீர்வுகள் கிடைக்கின்றது. இவ் வழிகாட்டல் சேவையின் மிக முக்கிய கூறாக ஆலோசனை வழங்கல் (Counseling அமைகின்றது இதனை உளவளத்துணை எனவும் அழைப்பர்.



                                    ஆலோசனை வழங்கல்

கடும் மழையில் போவதற்கு வழி தெரியாமல் தடுமாறும் ஒருவருக்கு கையில் குடையைக் கொடுத்து ஆலோசனை வழங்கி சரியான வழியைக் காட்டும் செயன்முறைக்கு இது ஒப்பானதாகவுள்ளது. தனியாள் ஒருவர் தனது பிரச்சினையை ஆலோசகருக்குத் தெரிவித்து மனம் திறந்து கலந்துரையாடி பிரச்சினைக்குத் தீர்வு காணும் செயன்முறையாக இது உள்ளது.


இச் செயன்முறை ஆலோசனை வழங்குபவருக்கும், ஆலோசனை பெறுபவருக்கும் இடையில் ஏற்படும் புரிந்துணர்வு வளர்ச்சியினூடான மனிதத்துவ செயன்முறையாகும். ஆலோசனை வழங்குபவர் ஒத்த உணர்வுடன் ஆலோசனை பெற வந்தவர் மனம் திறந்து தன் பிரச்சினைகளைக் கூற அதைக் கேட்கும்போதே பலருடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடுகின்றன. அடக்கி ஒடுக்கப்படும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ஆறுதல் பெறுவதற்கு ஒரு பாதுகாப்பான சூழலை இச் செயன்முறை உருவாக்குகின்றது. இச் செயன்முறை உளவியல் விழிப்புணர்வையும், உள்ளார்ந்த ஆற்றலையும், ஆளுமை வளர்ச்சியையும், சுய நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளின் தாக்கங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை ஒருவரிடத்தில் விருத்தி செய்ய உதவி வழங்கும் செயன்முறையாக இது உள்ளது. இது மன வேதனை, துன்பத் தாக்கங்களில் உள்ளவர்களுக்கு ஆறுதல், பரிகாரமளிக்கும் செயன்முறையாகவுள்ளது.

ref - e-thaksalawa

No comments:

Powered by Blogger.

Join us on Facebook

Please wait..20 SecondsCancel